Friday, December 17, 2010துயர் மிகு
வரிகளை
எழுதி
முடிக்கும்
போதெல்லாம்
வந்து
விழுந்து
விடுகிறது
ஓற்றை
கண்ணீர்த்துளி
முற்றுப்
புள்ளியாய்.

***************

நெடிய
தனிமைப்
பயணத்திலும்
வந்து
சேர்ந்து
விடுகிறது
ஒற்றைக்
குழலொலி.

**************

காதலின்
சுவை
உப்புச்சுவை
தானோ?

**************
அம்மா
உன்
சிறகிலிருந்து
பிரிந்த
இறகு நான்.
வானத்தை
அளந்து
கொண்டிருக்கிறேன்
உன் நிழலில்.

*************

பெரும்
இரைச்சலுடன்
விழும்
அருவியில்
தனியனாய்த்
தலை
கொடுப்பதைப்
போலிருக்கிறது
உன் விழிகள்
என்னைச் சுற்றி
மல்லிகைக்
கொடியாய்
படரும்போது.

**************

Monday, December 13, 2010

சுனை

எல்லாவற்றையும்
துடைத்து
எடுத்து
விட்டதாக
எக்காளமிடாதே.
அன்பெனும்
சுனை
என்றும்
வற்றுவதில்லை
என்பதனை
சொல்லிக்
கொள்ள
ஆசைப்படுகிறேன்
மெலிதான
கர்வத்துடன்.

Friday, December 3, 2010

தஞ்சை பிரகாஷ்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் முதல் விருது
ஆ.மாதவனுக்குக் கொடுக்கிறார்கள். இணையத்தில்
ஜெயமோகன் பக்கத்தில் ஆ.மாதவனின் நேர்காணல்
விரிவாய் வந்துள்ளது. அதில் மாதவன் தஞ்சை
பிரகாஷ் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
பிரகாஷ் வாழும் காலத்தில் மட்டுமல்ல, அவரது
மறைவுக்குப் பின்னும் கூட புறக்கணிக்கப்
படுவதாய் தோணுகிறது.
அங்கிள்
கள்ளம்
கரைமுண்டார் வீடு
மீனின் சிறகுகள்
மற்றும் மிக அற்புதமான சிறுகதைகள்.
அவர் எழுதியவை இன்னும் நிறைய.
அதைவிட அவர் பேசியவை மிக
மிக அதிகம்.
எங்கள் ஆசான் அவர்.
அவரின் கடலளவு சிஷ்யர்களில்
ஒரு துளி நான்.
சுந்த்ர்ஜி கூடவே இருந்தவர்.
இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள்
ஒவ்வொருவரும் பிரகாஷைப்
தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.

பி.கு: பிரகாஷ் உயிருடன்
இருந்திருந்தால் இதை எழுத
அனுமதித்திருப்பாரா என்பது சந்தேகம்.

Sunday, November 28, 2010

நந்தலாலாதாயெனும் பேரன்பைத் தேடும் நெடும் பயணம்.
குதூகலமும்,கொந்தளிப்பும் படமெங்கும் நிரம்பி
வழிகிறது. கடைசி 30 நிமிடங்களைப் பீறிடும்
கேவல்கள் இல்லாமல் பார்க்க முடியவில்லை.
பின்னணி இளையராஜா எனும் பிரம்ம ராட்சஸ்.
மொட்டை எங்கள் செல்ல மொட்டை.

நந்தலாலா கீழேயுள்ள ஜப்பானியப் படத்தின்
தழுவல் என்று சொல்லப் படுகிறது. அதை
இன்னும் பார்க்க இயலவில்லை.

href="http://1.bp.blogspot.com/_8mbgcTnhcFo/TPKGJgMWoEI/AAAAAAAAAGE/fY-wPX6r3vU/s1600/220px-Kikujiro_poster.jpg">

Friday, November 26, 2010

வானமே எல்லை இல்லை

உன் பாதங்களில்
அறையப்பட்ட
ஆணிகளை
அகற்று.
சுதந்திரம்
கல்வி
இவ்விரு
சிறகுகளைப்
பொறுத்திக் கொள்.
மண் உதைத்து
உயரக் கிளம்பு.
வானமே எல்லை.
இப் பொது
விதி உனக்கல்ல.
ஆகாயத்திற்கு
அப்பாலும்
ஆச்சர்யங்கள்
இருக்கக் கூடும்.
தேடு.
தேடல்தான்
வாழ்ந்ததற்காய்
நாம்
விட்டுச் செல்லும்
அடையாளம்.
அது
மணலில் விட்ட
காலடித் தடமல்ல.
மலையில்
செதுக்கியச்
சிற்பம்.

Wednesday, November 24, 2010

Monday, November 22, 2010

நம்பிக்கைதேவதைகள்
கால் பதிக்க
மறுக்கும்
இருண்ட
மனங்களால்
சூழப்பட்ட
வாழ்வினை
வாழ்ந்து
தீர்ப்பதற்கான
நம்பிக்கையைத்
தந்து கொண்டே
இருக்கிறது
பார்க்கும்
ஒவ்வொரு
குழந்தையின்
வற்றாத
புன்னகை.

Tuesday, November 16, 2010

ப்ரிய சகிநம் குழந்தையை நீ முத்தமிடும் போதெல்லாம்
நீ எனக்கு தந்த முத்தத்தின் நீட்சிதானோ இதுவென
நினைக்காமலிருக்க முடியவில்லை.

***********************************************

நம் அலுவலகத்திற்கு தற்செயல் விடுப்பு எடுத்துக்
கொண்டு அந்தக் கடற்கரையில் கால்கள் நனைத்து
திரிந்தோமே அந்த மணற்துகள்கள் இன்னமும்
உதிராமல் ஒட்டிக்கொண்டிருக்கின்றன மனசுக்குள்.

***********************************************

நம் திருமணத்தன்று உன் நெற்றிக்குத் திலகமிடும்
போது என் விரல்கள் நடுங்கியதற்கு சுற்றமும்
நட்பும் நகைக்க உனக்கு மட்டும் புரிந்ததுதானே
அது நம் காதலின் அதிர்வென.

***********************************************

என் காதலுக்குச் சம்மதம் சொன்ன அன்று நீ
உடுத்தியிருந்த புடவையில் நம் குழந்தைக்குத்
தொட்டில் கட்டிய போது எனக்குத் தோன்றியது
அது நம் காதலின் வெற்றிக் கொடியென.

***********************************************

அன்று நம் காதலுக்காகவே இளையராஜா மிக
இனிமையான பாடல்களைத் தந்தார் என்று
சொன்னால் இளையரஜா ரசிகர்கள் மிகவும்தான்
கோபித்துக் கொள்கிறார்கள். அவர்களை
மன்னித்து விடு சகி.

***********************************************

Sunday, November 14, 2010

களைதல்திருமண
விருந்து
முடிந்ததும்
ஆபரணங்களைக்
களையும்
மணப்பெண்ணைப்
போல்
தன்னை
வெளிப்
படுத்திக்
கொள்கிறதென்
கவிதை.

Friday, October 29, 2010

அறிக்கைஅருத்தி ராயின் அறிக்கை :
நான் இதை காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரிலிருந்து எழுதுகிறேன். காஷ்மீரைப் பற்றி அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நான் பேசியவற்றுக்காக நான் கைதுசெய்யப்படலாம் என இன்றைய செய்தித் தாள்கள் கூறுகின்றன. இங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். பல்வேறு அரசியல் நோக்கர்களும் பல ஆண்டுகளாகச் சொல்லியும் எழுதியும் வருவதைத்தான் கூறினேன். நான் பேசியவற்றின் எழுத்து வடிவத்தைப் படிப்பவர்கள் அவை அடிப்படையில் நீதிக்கான அழைப்புகள் என்பதை உணர்வார்கள். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தோடு காஷ்மீருக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் ; தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குப்பைகளுக்குக் கீழே மறைந்துகிடக்கும் புதைகுழிகளைப் பார்த்தேனே காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரர்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; இந்த ஆக்கிரமிப்புக்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கும் , இப்போது போலீஸ் ராச்சியமாக மாறிவிட்ட நாட்டில் பயங்கரங்களுக்கிடையே வாழப் பழகிக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் நான் பேசினேன்.
நேற்று தெற்கு காஷ்மீரில் இருக்கும் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு நான் போயிருந்தேன். அங்குதான் ஆசியா , நிலோஃபர் என்ற இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அருகில் ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டன . குரூரமாக அவர்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டில் நாற்பத்தேழு நாட்கள் அந்த நகரம் மூடப்பட்டுக் கிடந்தது. அவர்களைக் கொன்றவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. நிலோஃபரின் கணவரும் ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன்.இந்தியாவிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துபோன, சுதந்திரம் ஒன்றுதான் ஒரே நம்பிக்கை என்று கருதுகிற மக்கள் துக்கத்தோடும் கோபத்தோடும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிச் சூழ்ந்திருந்தார்கள். கல்வீசியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டு கண்களுக்கிடையே தோட்டாவால் துளைக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தேன். என்னோடு பயணம் செய்த இளைஞர் ஒருவர் அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களான ‘ டீன் ஏஜ்’ இளைஞர்கள் மூன்றுபேரை எப்படி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் கல் வீசியதற்காக அவர்களது விரல் நகங்கள் எப்படி பிடுங்கப்பட்டன என்பதை விவரித்தார்.
‘ வெறுப்பைக் கக்கும் பேச்சை நான் பேசியதாக நாளேடுகளில் சிலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்தியா சிதைவதை நான் விருபுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கு மாறாக எனது பேச்சு அன்பிலிருந்தும் பெருமிதத்திலிருந்தும் வருகிறது. நாங்கள் எல்லோரும் இந்தியர்கள்தான் என அவர்களைப் பலவந்தப்படுத்திச் சொல்லவைக்கவேண்டும் என்பதற்காக அவர்களது விரல் நகங்களைப் பிடுங்கவேண்டாம்; கற்பழிக்கவேண்டாம் , படுகொலை செய்யவேண்டாம் என்ற உணர்விலிருந்து வருகிறது. நீதி விளங்கும் ஒரு சமூகத்தில் வாழவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து வருகிறது. தமது எண்ணங்களைப் பேசுகிற காரணத்தால் எழுத்தாளர்களை மௌனிகளாக்கி வைக்க இந்த தேசம் விரும்புகிறது என்பது பரிதாபகரமானது. நீதி கோருபவர்களை சிறையில் அடைக்க இந்த நாடு முயற்சிக்கிறது, ஆனால் மதவெறிக் கொலைகாரர்கள் ; இனப்படுகொலைகளைச் செய்தவர்கள் ; கொள்ளைக்காரர்கள்; கற்பழிப்பவர்கள் , ஊழல் செய்பவர்கள், ஏழைகளிலும் ஏழையான மக்களைச் சுரண்டுபவர்கள் போன்றவர்களெல்லாம் இங்கே சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அக்டோபர் 26, 2010 அருந்ததி ராய்

பி.கு : இது நிறப்பிரிகை ரவிக்குமார் அவர்களால்
மொழிபெயர்க்கப் பட்ட அறிக்கை.

Thursday, October 28, 2010

கவிதை குறித்துகண்ணாடிச்
சுவரில்
வழுக்கி
விழும்
மழைத்
துளிகளைப்
போல்
நழுவி
விடுகின்றன
கவிதைக்கான
சாத்யங்கள்.தன்
கூடை
தானே
சுமந்து
செல்லும்
நத்தையைப்
போல்
வார்த்தைகளைச்
சுமந்து
அலைகிறதொரு
கவிதை.
கனவிற்கு
வர்ணம்
தீட்டப்
போகிற
கவிதையை
எழுதப்
போகும்
கவியைத்
தேடிக்
கொண்டிருக்கிறதொரு
கவிதை.

Wednesday, October 27, 2010

அறிந்ததும், அறியாததும்நீ
இட்ட
முதல்
முத்தம்
ஞாபகத்தில்
உளது.
கடைசி
இல்லை.
அது
கடைசியென
அறியப்
படாததால்.

Saturday, October 23, 2010

ஊஞ்சல்

நிறைவு
செவியில்
சங்கீதம்
பொருத்திக்
கொண்டு
தனிமை
தேடுகிறது.
நிறைவின்மையோ
கொந்தளிக்கும்
வரிகளில்
சமன்
குலைத்துக்
கொள்கிறது.
நிறைவிற்கும்
நிறைவின்மைக்கும்
இடையே
ஊஞ்சலாடிக்
கொண்டிருக்கிறது
ஜீவிதம்.

Thursday, October 21, 2010

சாத்தியம்

ஒரு
வண்ணத்து
பூச்சியின்
பயணக்
குறிப்பை
மொழிபெயர்த்து
விடலாம்
உறக்கத்தில்
புன்னகைக்கும்
குழந்தையின்
கனவினை
அறிய முடிந்தால்.

Friday, October 15, 2010

கூறியது கூறல்சுத்தம்
சோறு போடும்.
அசுத்தமும்
ஆகாரம் போடும்.இளமையில்
கல்.
முதுமையிலும்.அன்பிற்கும்
உண்டு
அடைக்கும்
தாழ்.

Tuesday, October 12, 2010

அம்புகள்

தல்ஸ்தோய்
குளிரில்
விறைதார்.
பாரதி
யானையின்
காலில்
மிதிபட்டார்.
ஆத்மாநாம்
மாடியிலிருந்து
தாவினார்.
ஆதவன்
சிருங்கேரியில்
மூழ்கினார்.
மரணத்தின்
முன்
வீசப்பட்ட
எதிர் கேள்விகள்
முனை முறிந்த
அம்புகளோ?

Saturday, October 9, 2010

ஒற்றைப் பாதை


கிருஸ்து
கிருஷ்ணன்
புத்தர்
மார்க்ஸ்
காந்தி
ரமணர்
ஜேகே
ஓஷோ.
இவர்களைச்
சென்றடையும்
ஒற்றைப் பாதை
எங்கிருந்து
ஆரம்பிக்கிறது?
சாலையோரம்
கடவுள் சாயலில்
நின்று
கொண்டிருந்தவரிடம்
கேட்டேன்.
வெண்தாடியை
உருவியவாறு
மென்குரலில்
சொன்னார்:
’நூலகத்திலிருந்து’.

Thursday, October 7, 2010

வரங்கள்

பேருந்து
பயணத்தில்
வாய்த்த
குழந்தையின்
புன்னகை.

*************

தளர்ந்து
அமர்கையில்
கன்னம்
தடவும்
மென் இறகு.

************

பருகி
முடித்த
தேநீர்க்
கோப்பையின்
விளிம்பில்
வந்தமரும்
வண்ணத்துப்பூச்சி.

*************

பழைய
புத்தகத்திலிருந்து
தன்னை
விடுவித்துக்
கொண்டு
வெளிப்படும்
காதல் கடிதம்.

**************

Tuesday, October 5, 2010

புத்தம் புது வார்த்தை


வார்த்தை
போதாமையால்
முடிக்கப்படாமல்
இருக்கிறது
அக்கவிதை
விழிகள்
திறக்கப்படாத
ஓர் ஓவியம்
போல்.
உபயோகித்து
மழுங்கிப்
போனவைகளையும்
பொய்ப் புனிதம்
ஏற்றப்பட்ட
வார்த்தைகளையும்
விலக்கினால்
மிஞ்சுபவை
ஒன்றுமில்லை.
நியூட்டனுக்காய்
உதிர்ந்த
கனி போல்
தன்னை
வெளிப்படுத்திக்
கொள்ளாமலாப்
போய்விடும்
ஒரு
புதிய வார்த்தை.

Sunday, October 3, 2010

ஆம் ...


ஆம்
தோழர்களே.
கடைசி
ரயிலையும்
தவறவிட்டவன்
நான்.
அதன்
சிகப்பு வெளிச்சப்
புள்ளிகள்
இன்னமும்
மறையவில்லை.
தண்டவாளத்தின்
மெல்லிய
அதிர்வும்
அடங்கவில்லை.
ஆம்
தோழர்களே.
அதனை
தவறவிட்டதால்
நாளைய
முதல் ரயிலுக்காய்
காத்திருப்பவன்
என யூகித்தால்
அதனையும்
தவறவிடப் போகிறவன்
நான்.

Monday, September 27, 2010

கவிதையின் கண்ணீர்பிரசுரத்திற்கு
மறுக்கப்பட்ட
கவிதைகள்
ஒன்று கூடி
குற்றஞ்சாட்டின:
வாசிக்கப் படாமல்
இருப்பதைவிட
எழுதப் படாமல்
இருப்பது
சாலச்சிறந்தது.
அவைகளின்
கண்ணீரைத்
துடைப்பதற்கேனும்
எழுத வேண்டும்
ஒரு கவிதையை.

Sunday, September 26, 2010

ருசி


கிளை
உலுக்கி
உதிர்த்தல்
வன்முறை.
கனிந்து
கிளை
பிரிதலே
ருசி.

Monday, September 20, 2010

one night @ the call center


சேத்தன் பகத்தின் இரண்டாவது நாவல்.
இவரது முதல் நாவல் Five Point Someone.
3 இடியட்ஸ் ன் மூலம்.
ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் இவர் தன்னை
வித்தியாசப் படுத்துகிறார். IIM/IIT பின்புலம் இவருக்கு
இன்றைய இளைஞனின் பார்வையில் கதை சொல்ல
உதவுகிறது.

one night @ the call center.

சியாம்.
ப்ரியங்கா.
வருண்.
ராதிகா.
இஷா.
மிலிட்டரி அங்கிள்.

ஒரு கால் செண்டரில் இரவு ஷிஃப்ட்.
சியாம் மென்மையான தயக்கங்களும்,Recession குறித்த பயங்களும்
நிரம்பியவன்.
பிரியங்கா அம்மா கோண்டு. சியாம் மேல் இருந்த காதலை
உதறியவள்.அமெரிக்க மைக்ரோஷாப்ட் இளைஞனை மணம்
முடிக்கும் அபிப்ராயத்தில் இருப்பவள்.
வருண் பெண்சிநேகிதிகள்,பீட்ஸா,பர்கர்,கோக் வேகமான
ட்டூ வீலர் டிரைவிங்பிரியன்.
ராதிகா மாமியாருக்கு பயந்து நடுங்கும் நடுத்தர வர்க்கம்.
இஷா மாடலிங்கில் பிரபலமாக முயற்சிப்பவள்.
மிலிட்டரி அங்கிள் அமெரிக்காவில் இருக்கும் பேரனுக்காய்
ஏங்கிக் கொண்டிருப்பவர்.
பக்‌ஷி அதிகாரத்தொனியும்,ஏமாற்று புத்தியும் கொண்ட
அந்தக் கால் செண்டரின் பாஸ்.
ஒரே இரவு.
அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்.
அனைவரின் உயிருக்கு ஆபத்தான நேரத்தில் சியாமுக்கு
அலை பேசியில் ஓர் அழைப்பு.

கடவுளிடமிருந்து.

It is okay to scream in public if you are hungry
"I'm starving". It is okay to make a fuss if you
are tired"I'm so sleepy". But somehow we cannot
say " I just need some more love". Why can't we say
it Shyam? It is a basic a need.

சேத்தன் இந்தக் கேள்வியை நம் அனைவரையும்
நோக்கி கேட்கிறார்.

நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.

பி.கு : இதுவும் திரைப்படமாக்கப் பட்டு ஜோதியில்
கலந்து விட்டது.

Saturday, September 11, 2010

ப்ரிய சகிஅம்மாவை முதன் முதலில் எங்கே சந்தித்தீர்கள் அப்பா என்று நம்
பெண் கேட்டதும் உன் கண்களில் ஒரு மின்னல் அடித்ததே...அது
நம் முதல் சந்திப்பில் நமக்குள் பெய்த மழையின் மிச்சம்தானே சகி?

**************

நம் குழந்தை பிறந்த நொடியில் முதலில் அழுதது நான் தான் என்று
என்னை நீ கேலி செய்யும் பொழுதெல்லாம் உன் விழியோரங்களில்
திரண்டு நிற்கிறதே..அதன் பெயர் என்ன சகி?

**************

உன் அடிவயிற்று பிரசவ தழும்புகளை நம் குழந்தைகளின்
தேசத்திற்கான வரைபடம் என்று நான் சொல்லும்போதெல்லாம் நீ
உதிர்க்கும் வெட்கப் புன்னகைகளைச் சேர்த்து வைத்திருக்கிறேன்.
அவ்வப்போது புரட்டிப் பார்த்துக் கொள்ள சகி.

**************

சகி..இப்போதெல்லாம் உன் மூச்சுக் காற்றில் சுழன்று வீழ்கிறது
என் காமம்.

**************

சகி...நம் காதல் கடிதங்களை உன் புடவைகளுக்கு அடியில் நீ
பத்திரப் படுத்தி வைத்திருக்கிறாய். நானோ என் மனசின் அடியில்.

Thursday, September 9, 2010

நிரம்பி வழியும் கோப்பை

இசையின்
மடிப்புகளில்
பதுங்கியிருக்கும்
மெளனத்திற்கான
தேடல்களுடன்
சுழன்று
கொண்டிருக்கிறேன்
இசைத் தட்டுகளுடன்.

*************************

இரவின்
குளிர்ச்சியில்
உருகிவிடுகிறது
எந்தவொரு
வெம்மையும்.

*************************

காற்றில்
ஆடும்
திரைச்சீலையைப்
போல்
உள்ளுக்குள்
அசைந்து
கொண்டேயிருக்கிறது
ஒரு
காமம்.

Thursday, August 26, 2010

காத்திருக்கும் ஒற்றைக் கேள்விஅவரை
எவரேனும்
சந்திக்க
நேர்ந்தால்
என் முகவரியைச்
சொல்லுங்கள்.

அவரிடம்
கேட்பதற்கான
கேள்வியொன்று
நீரில்
மூழ்க மறுக்கும்
பலூன் போல்
திமிறிக்கொண்டிருக்கிறது
மனசின் ஆழத்துள்.

Sunday, August 22, 2010

ஆறுதல்ஓடிக்கொண்டிருந்த
நதியைக்
காணவில்லை.
தங்கியிருந்த
குளத்தைக்
காணவில்லை.
அருவிகள்
மட்டும்
கொட்டிக்
கொண்டிருக்கின்றன
ஆசுவாசப்படுத்த.

Wednesday, July 28, 2010

பிரிய ரெஜி டீச்சர்ஞாபகமிருக்கிறதா டீச்சர்.
நான் வனப்பேச்சி.
நீலிமலை வனப்பேச்சி.
காட்டில் பெய்யும் மழை போல உங்கள் நினைவுகள்
மிக அடர்த்தியாய் இன்னமும் இருக்கிறது.
நன்றாக ஞாபமிருக்கிறது டீச்சர்.
மிஷனரிகள் கூட கண்டுகொள்ளாத காடு எங்களது.
தினமும் பத்து கிலோமீட்டர் தூரம் ஏறி வருவீர்கள்.
எங்களுக்கும் எல்லாம் கற்றுக் கொடுத்தது நீங்கள் தான்.
முதல் குருதி குறித்து கூட.
அப்போது நீங்கள் எங்களின் தேவதை.
காக்கி பேண்ட்டும்,ஒட்ட வெட்டிய தலை மயிரும்
செல்வதற்கு ஒரு சைக்கிளுமாய் நீங்கள்
நீங்கள் நிரம்ப மாறுபட்டிருந்தீர்கள்.
உங்கள் சிந்தனைகளும் தான்.
கல்வியின் முக்கியத்துவம் உங்களால்தானே
அறிந்தோம். அந்த உந்துதலில்தான்
பொறியியல் படித்தேன்.
கட்டாயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
வனத்தையும்,மலைகளையும்
தெய்வங்களாய் வணங்கும் நாங்கள்
இந்த அரசாங்கத்தால் எவ்வளவு
இழிநிலைக்குத் தள்ளப் பட்டிருக்கோமேன.
பெரு முதலாளிகள் வனங்களையும்
மலைகளையும் கொன்று குவித்துக்
கொண்டிருக்கிறர்கள். அவர்கள் அருகே
அரசு மர்மப் புன்னகையுடன் கைகட்டி
ஏவல் செய்கிறது.
எங்களை நாகரீகப் படுத்துதல் என்கிற
பெயரில் காடுகளிருந்து நகரத்துக்கு
அப்புறப் படுத்த முயற்சிக்கிறார்கள்.
அதைத்தான் நாங்கள் எதிர்க்க
ஆரம்பித்திருக்கிறோம்.
அதனாலேயே எங்களுக்கு
தீவிரவாதிகளென பெயர்சூட்டி
அரசாங்கம் ஊடகங்களின் துணையுடன்
பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.
இதற்கு நம் அறிவுஜீவிகளின் ஆதரவு வேறு.
டீச்சர்...
எந்த நேரமும் நாங்கள் படுகொலை
செய்யப்படலாம். எங்கள் பெண்கள்
வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் படலாம்.
எத்தகைய யுத்தத்திலும்
முதல் பாதிப்பு பெண்களுக்கும்,
குழந்தைகளுக்கும் தானே.
அதுதான் இங்கே நடந்து
கொண்டிருக்கிறது.
டீச்சர்...
ரெண்டு,மூன்று நாட்களகவே
உங்கள் ஞாபகம் வந்து கொண்டே
இருக்கிறது. அதனாலே இக் கடிதம்.
இது உங்கள் கையில் கிடைக்கலாம்.
கிடைக்காமல் போகலாம்.
எனினும் நம்பிக்கையுடன்
முடிக்கிறேன்.
தாங்கள் நலமா என்று விசாரிக்க
கூட முடியாத நெருக்கடியில் நிற்கிறேன்.

உங்கள்

வனப்பேச்சி.

கடிதத்தை மடிக்கையில் பின் பக்கம்
மெலிதான சப்தம் கேட்டது.
திரும்புவதற்குள்
வனப்பேச்சியின் பின் மண்டையில்
பேரரவத்துடன் ஒரு துப்பாக்கி வெடித்தது.

Sunday, July 25, 2010

வீசும்
காற்றினை
அனுசரித்து
பயணிக்கும்
பாய்மரக் கப்பலின்
யுக்தியின்
வழி
நகர்கிறதென்
ஜீவிதம்.

***************

புதர்
மறைவிலிருந்து
வெளிப்படும்
மிருகத்தின்
நெற்றிக்காய்க்
காத்திருக்கிறது
ஒற்றைத் தோட்டா.

***************

வனத்தில்
திசை
மயங்கியவனுக்காக
விட்டுப் போகிறது
யானை
தன்
சாணத்தை.

Thursday, July 22, 2010

மாறுதல்நீந்தி
கிளிஞ்சல்கள்
பொறுக்கி
வீடு கட்டி
சிதைத்து
திளைத்த
ஞாபகச்
சுவடின்றி
அலை
தொடா
தூரத்தில்
புகைப்படம்
எடுத்தவாறு
நான்.

என்றும்
மாறுவதில்லை
கடல்.

Monday, July 19, 2010

இரண்டு படங்கள்இந்த வாரம் இரண்டு படங்கள் பார்த்தேன்.
இரண்டும் என்னை வசீகரித்தன.

Inception (2010)
***************
தொழில் நுட்பத்தால் நம்மை பிரமிக்க வைத்த படங்கள் ஏராளம்.
மதி நுட்பத்தால் வியக்க வைத்த படம் இது.
ஒருவர் கனவில் மற்றவர் புகுவது.
நம் கனவை நாமே அமைத்துக் கொள்வது.
ஒருவர் மூளையில் பதிந்திருக்கும் ஒரு ஐடியாவை வெளியே எடுத்து விட்டு
வேறொரு ஐடியாவை செருகுவது.
முடிவேயில்லாப் படிக்கட்டு.
சொல்லிக் கொண்டே போகலாம்.
கிறிஸ்டோபர் நோலன் படத்தின் இயக்குனர்.
ஒவ்வொரு சீனிலும் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது.
படத்தை முறையாக பின் தொடரவில்லை என்றால்
குழம்பிப் போவதற்கு சாத்தியமுண்டு.
நோலன் முன்பு Memento என்ற படம் எடுத்துள்ளார்.
முருகதாஸின் இயக்கத்தில் கஜினி என்றொரு படம் வந்ததே
அது இதன் அப்பட்டமான நகல்.
களவாணி
*********

ரொம்ப நாளைக்குப் பின் சந்தோஷமாய் ஒரு படம்.
சற்குணம் இயக்கியுள்ளார்.
தஞ்சை மண்ணுகே உரிய நக்கல்.. நையாண்டி.
எந்த் சிடுமூஞ்சியும் இதழ் பிரிக்காமல் படம் பார்க்க முடியாது.
மிக எளிமையாய் நகர்கிறது படம்.
இந்த புதியவரிடம் so called ஜாம்பவான்கள்
பாடம் கற்றுக் கொண்டால் நம்மை மாதிரி ரசிகர்கள்
பிழைத்துப் போகலாம்.

Wednesday, July 14, 2010

இரண்டுக்குமிடையே

காற்றில்
அசையும்
சரவிளக்கின்
மெல்லிய
வெளிச்சம்
போல்
அங்கீகாரத்திற்கும்
நிராகரிப்பிற்கும்
இடையே
ஊசலாடுகிறது
ஒரு
பெருங்காதல்.

Monday, July 12, 2010

கவிதானுபவம்பறவை
போல்
பறத்தல்
சாத்யமாகிறது
சில
கவிதைகளை
எழுதும் போதும்
சிலவற்றை
வாசிக்கும் போதும்.
தரையில்
மோதி
வீழவும்
நேரிடுகிறது
சிலவற்றை
எழுதும் போதும்
வாசிக்கும் போதும்.

Tuesday, July 6, 2010

என்றாவது ஒரு நாள்மீதமிருக்கிறப்
பொய்களை
விநியோகம்
செய்து
முடிப்பதற்குள்ளே
பறவை
உதிர்த்த
ஒற்றைச் சிறகு
காற்றில்
மிதந்து வந்து
உள்ளங்கையில்
அமர்வது போல்
உண்மை
தன்னை
விடுவித்துக் கொண்டு
வட்டமிடும்.

Saturday, July 3, 2010

சருகுகளின்
இசையூடே
காற்று
நடக்கும்போது
வனம்
தன்
பாடலை
பாடத்தொடங்குகிறது.

Saturday, June 26, 2010

ஏன் இப்படி?

எனக்கு ஜெயமோகனின் எழுத்துகள் மீது அபார மோகம்.
அதே மாதிரி சாருநிவேதிதாவின் எழுத்துக்கள் மீதும்.
இரண்டு பேரின் எழுத்துக்கள் வெவ்வேறு வகை.
ஆனால் இவர் அவரின் எழுத்துக்களைப் புறந்தள்ளுகிறார்.
அவர் இவரின் எழுத்துக்களை எள்ளி நகையாடுகிறார்.
உபரியாய் இவரின் ரசிகக்கூட்டம் அவரையும்
அவரின் ரசிகக்கூட்டம் இவரையும் போட்டுத் தாக்குகிறார்கள்.
அதனை இலக்கிய விமர்சனம் என்றும் எடுத்துக் கொள்ளமுடியவில்லை.
பின் என்னதான் நடக்கிறது?
இதேமாதிரி காலச்சுவடும் பிடிக்கும். உயிர்மையும் பிடிக்கும்.
ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம்
இருவரும் (கண்ணன்,மனுஷ்யபுத்திரன்) ஒருவரை ஒருவர்
சாடிக் கொள்கிறார்கள்.
இவைகளுக்கிடையே நான் மிரள மிரள விழித்துக்கொண்டு
நிற்கிறேன். எதாவது ஒரு பக்கம் ஒதுங்குவதுதான்
பொது நியதியோ?

Friday, June 25, 2010

காணவில்லை

ஆம்.
தோழர்களே.
நட்சத்திரங்களைத்
தொலைத்தவன்
நான்.
காணாமல்
போனவர்களைப்
பற்றிய
அறிவிப்பில்
வெளியிடவேண்டும்
என்
பெயரையும்.

Thursday, June 24, 2010

மற்றொரு பிலாக்

நண்பர்களுக்கு வணக்கம்.
இன்னொரு பிலாக்கிலும் எழுதிகொண்டிருக்கிறேன்.
வருகைக்கும் வாசிப்பிற்கும் கீழே:

http://Madumithaa.blogspot.com

Monday, June 21, 2010

கடிதங்களின் மரணம்

நலம்
நலமறிய
ஆவல்
சொன்ன
நீலப் பறவையின்
சிறகுகளை
முறித்தது
யார்?

சமுத்ரம்முதல்
துளியில்
நனைவதின்
சந்தோஷம்
சமுத்ரமாய்
விரியட்டும்.