A Great Collection of all Tamil aggregators

Sunday, November 28, 2010

நந்தலாலா



தாயெனும் பேரன்பைத் தேடும் நெடும் பயணம்.
குதூகலமும்,கொந்தளிப்பும் படமெங்கும் நிரம்பி
வழிகிறது. கடைசி 30 நிமிடங்களைப் பீறிடும்
கேவல்கள் இல்லாமல் பார்க்க முடியவில்லை.
பின்னணி இளையராஜா எனும் பிரம்ம ராட்சஸ்.
மொட்டை எங்கள் செல்ல மொட்டை.

நந்தலாலா கீழேயுள்ள ஜப்பானியப் படத்தின்
தழுவல் என்று சொல்லப் படுகிறது. அதை
இன்னும் பார்க்க இயலவில்லை.

href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqVuRzFIScN-9962k_HLBlTW6Rbm4C_1cnW60VcLKhl4cQWuebF-srlKKBpFlFn4MAhOvWdiaOELAOcWaMFEoDkcSTHUP8GHqxLMkjEhaTZPNcghSTmIe4HRPLEXhJ2ZYDEfUuMVskUfk/s1600/220px-Kikujiro_poster.jpg">

Friday, November 26, 2010

வானமே எல்லை இல்லை

உன் பாதங்களில்
அறையப்பட்ட
ஆணிகளை
அகற்று.
சுதந்திரம்
கல்வி
இவ்விரு
சிறகுகளைப்
பொறுத்திக் கொள்.
மண் உதைத்து
உயரக் கிளம்பு.
வானமே எல்லை.
இப் பொது
விதி உனக்கல்ல.
ஆகாயத்திற்கு
அப்பாலும்
ஆச்சர்யங்கள்
இருக்கக் கூடும்.
தேடு.
தேடல்தான்
வாழ்ந்ததற்காய்
நாம்
விட்டுச் செல்லும்
அடையாளம்.
அது
மணலில் விட்ட
காலடித் தடமல்ல.
மலையில்
செதுக்கியச்
சிற்பம்.

Monday, November 22, 2010

நம்பிக்கை



தேவதைகள்
கால் பதிக்க
மறுக்கும்
இருண்ட
மனங்களால்
சூழப்பட்ட
வாழ்வினை
வாழ்ந்து
தீர்ப்பதற்கான
நம்பிக்கையைத்
தந்து கொண்டே
இருக்கிறது
பார்க்கும்
ஒவ்வொரு
குழந்தையின்
வற்றாத
புன்னகை.

Tuesday, November 16, 2010

ப்ரிய சகி



நம் குழந்தையை நீ முத்தமிடும் போதெல்லாம்
நீ எனக்கு தந்த முத்தத்தின் நீட்சிதானோ இதுவென
நினைக்காமலிருக்க முடியவில்லை.

***********************************************

நம் அலுவலகத்திற்கு தற்செயல் விடுப்பு எடுத்துக்
கொண்டு அந்தக் கடற்கரையில் கால்கள் நனைத்து
திரிந்தோமே அந்த மணற்துகள்கள் இன்னமும்
உதிராமல் ஒட்டிக்கொண்டிருக்கின்றன மனசுக்குள்.

***********************************************

நம் திருமணத்தன்று உன் நெற்றிக்குத் திலகமிடும்
போது என் விரல்கள் நடுங்கியதற்கு சுற்றமும்
நட்பும் நகைக்க உனக்கு மட்டும் புரிந்ததுதானே
அது நம் காதலின் அதிர்வென.

***********************************************

என் காதலுக்குச் சம்மதம் சொன்ன அன்று நீ
உடுத்தியிருந்த புடவையில் நம் குழந்தைக்குத்
தொட்டில் கட்டிய போது எனக்குத் தோன்றியது
அது நம் காதலின் வெற்றிக் கொடியென.

***********************************************

அன்று நம் காதலுக்காகவே இளையராஜா மிக
இனிமையான பாடல்களைத் தந்தார் என்று
சொன்னால் இளையரஜா ரசிகர்கள் மிகவும்தான்
கோபித்துக் கொள்கிறார்கள். அவர்களை
மன்னித்து விடு சகி.

***********************************************

Sunday, November 14, 2010

களைதல்



திருமண
விருந்து
முடிந்ததும்
ஆபரணங்களைக்
களையும்
மணப்பெண்ணைப்
போல்
தன்னை
வெளிப்
படுத்திக்
கொள்கிறதென்
கவிதை.