A Great Collection of all Tamil aggregators

Friday, October 29, 2010

அறிக்கை



அருத்தி ராயின் அறிக்கை :
நான் இதை காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரிலிருந்து எழுதுகிறேன். காஷ்மீரைப் பற்றி அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நான் பேசியவற்றுக்காக நான் கைதுசெய்யப்படலாம் என இன்றைய செய்தித் தாள்கள் கூறுகின்றன. இங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். பல்வேறு அரசியல் நோக்கர்களும் பல ஆண்டுகளாகச் சொல்லியும் எழுதியும் வருவதைத்தான் கூறினேன். நான் பேசியவற்றின் எழுத்து வடிவத்தைப் படிப்பவர்கள் அவை அடிப்படையில் நீதிக்கான அழைப்புகள் என்பதை உணர்வார்கள். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தோடு காஷ்மீருக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் ; தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குப்பைகளுக்குக் கீழே மறைந்துகிடக்கும் புதைகுழிகளைப் பார்த்தேனே காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரர்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; இந்த ஆக்கிரமிப்புக்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கும் , இப்போது போலீஸ் ராச்சியமாக மாறிவிட்ட நாட்டில் பயங்கரங்களுக்கிடையே வாழப் பழகிக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் நான் பேசினேன்.
நேற்று தெற்கு காஷ்மீரில் இருக்கும் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு நான் போயிருந்தேன். அங்குதான் ஆசியா , நிலோஃபர் என்ற இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அருகில் ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டன . குரூரமாக அவர்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டில் நாற்பத்தேழு நாட்கள் அந்த நகரம் மூடப்பட்டுக் கிடந்தது. அவர்களைக் கொன்றவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. நிலோஃபரின் கணவரும் ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன்.இந்தியாவிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துபோன, சுதந்திரம் ஒன்றுதான் ஒரே நம்பிக்கை என்று கருதுகிற மக்கள் துக்கத்தோடும் கோபத்தோடும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிச் சூழ்ந்திருந்தார்கள். கல்வீசியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டு கண்களுக்கிடையே தோட்டாவால் துளைக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தேன். என்னோடு பயணம் செய்த இளைஞர் ஒருவர் அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களான ‘ டீன் ஏஜ்’ இளைஞர்கள் மூன்றுபேரை எப்படி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் கல் வீசியதற்காக அவர்களது விரல் நகங்கள் எப்படி பிடுங்கப்பட்டன என்பதை விவரித்தார்.
‘ வெறுப்பைக் கக்கும் பேச்சை நான் பேசியதாக நாளேடுகளில் சிலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்தியா சிதைவதை நான் விருபுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கு மாறாக எனது பேச்சு அன்பிலிருந்தும் பெருமிதத்திலிருந்தும் வருகிறது. நாங்கள் எல்லோரும் இந்தியர்கள்தான் என அவர்களைப் பலவந்தப்படுத்திச் சொல்லவைக்கவேண்டும் என்பதற்காக அவர்களது விரல் நகங்களைப் பிடுங்கவேண்டாம்; கற்பழிக்கவேண்டாம் , படுகொலை செய்யவேண்டாம் என்ற உணர்விலிருந்து வருகிறது. நீதி விளங்கும் ஒரு சமூகத்தில் வாழவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து வருகிறது. தமது எண்ணங்களைப் பேசுகிற காரணத்தால் எழுத்தாளர்களை மௌனிகளாக்கி வைக்க இந்த தேசம் விரும்புகிறது என்பது பரிதாபகரமானது. நீதி கோருபவர்களை சிறையில் அடைக்க இந்த நாடு முயற்சிக்கிறது, ஆனால் மதவெறிக் கொலைகாரர்கள் ; இனப்படுகொலைகளைச் செய்தவர்கள் ; கொள்ளைக்காரர்கள்; கற்பழிப்பவர்கள் , ஊழல் செய்பவர்கள், ஏழைகளிலும் ஏழையான மக்களைச் சுரண்டுபவர்கள் போன்றவர்களெல்லாம் இங்கே சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அக்டோபர் 26, 2010 அருந்ததி ராய்

பி.கு : இது நிறப்பிரிகை ரவிக்குமார் அவர்களால்
மொழிபெயர்க்கப் பட்ட அறிக்கை.

3 comments:

  1. நேருவின் முத‌ற் கோண‌ல், முற்றும் கோண‌லாய் இன்று.
    வாரிசுக‌ளாட்சி மாறியிருந்தால் (ம‌த்தியிலும், மாநில‌த்திலும்)
    மாறியிருக்க‌ளாம், க‌ல‌ம். 'ஊருக்கு இளைச்ச‌வ‌ன், புள்ளையார் கோயில் ஆண்டி' தான்.
    'த‌வ‌று செய்த‌வ‌னுக்கு சிம்மாச‌ன‌ம், அதை சொன்ன‌வ‌ருக்கு சிறை'

    ReplyDelete
  2. காஷ்மீரின் துயரம் அருந்ததியின் வார்த்தைகளில் குமுறலாய் வெடிக்கிறது.

    ஒரு மாநிலத்தின் பிரச்சினையை எவ்வளவு தூரம் அரசியல் லாபத்துக்காக இழுக்கமுடியுமோ அவ்வளவு இழுத்து தலைமுறைகளைக் காவு கொடுத்துவிட்டோம். இழப்பு ஈடு செய்ய முடியாத பொழுது அதற்கான விலையும் அதிகமாகத்தான் இருக்கும்.

    நேர்த்தியான மொழிபெயர்ப்புக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  3. மனதைக் கலங்க வைத்த பகிர்வு..காஷ்மீர் அளவுக்கதிமான குளிர் பிரதேசமாக இருந்தும் அங்கு வெம்மையே வாட்டி வதைக்கிறது அப்பாவி மக்களை. வாழ்தலுக்கான போராட்டம் என்பது சாவில்தான் முடிகிறது எனும்போது மனம் நொந்துபோகிறது. உன்னுடைய பகிர்வு நெஞ்சை இறுக்கி மூச்சுத்திணற வைக்கிறது மதுமிதா. கலங்கலுடன் உறரணி.

    ReplyDelete