A Great Collection of all Tamil aggregators

Friday, October 29, 2010

அறிக்கை



அருத்தி ராயின் அறிக்கை :
நான் இதை காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரிலிருந்து எழுதுகிறேன். காஷ்மீரைப் பற்றி அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நான் பேசியவற்றுக்காக நான் கைதுசெய்யப்படலாம் என இன்றைய செய்தித் தாள்கள் கூறுகின்றன. இங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். பல்வேறு அரசியல் நோக்கர்களும் பல ஆண்டுகளாகச் சொல்லியும் எழுதியும் வருவதைத்தான் கூறினேன். நான் பேசியவற்றின் எழுத்து வடிவத்தைப் படிப்பவர்கள் அவை அடிப்படையில் நீதிக்கான அழைப்புகள் என்பதை உணர்வார்கள். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தோடு காஷ்மீருக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் ; தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குப்பைகளுக்குக் கீழே மறைந்துகிடக்கும் புதைகுழிகளைப் பார்த்தேனே காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரர்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; இந்த ஆக்கிரமிப்புக்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கும் , இப்போது போலீஸ் ராச்சியமாக மாறிவிட்ட நாட்டில் பயங்கரங்களுக்கிடையே வாழப் பழகிக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் நான் பேசினேன்.
நேற்று தெற்கு காஷ்மீரில் இருக்கும் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு நான் போயிருந்தேன். அங்குதான் ஆசியா , நிலோஃபர் என்ற இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அருகில் ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டன . குரூரமாக அவர்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டில் நாற்பத்தேழு நாட்கள் அந்த நகரம் மூடப்பட்டுக் கிடந்தது. அவர்களைக் கொன்றவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. நிலோஃபரின் கணவரும் ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன்.இந்தியாவிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துபோன, சுதந்திரம் ஒன்றுதான் ஒரே நம்பிக்கை என்று கருதுகிற மக்கள் துக்கத்தோடும் கோபத்தோடும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிச் சூழ்ந்திருந்தார்கள். கல்வீசியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டு கண்களுக்கிடையே தோட்டாவால் துளைக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தேன். என்னோடு பயணம் செய்த இளைஞர் ஒருவர் அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களான ‘ டீன் ஏஜ்’ இளைஞர்கள் மூன்றுபேரை எப்படி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் கல் வீசியதற்காக அவர்களது விரல் நகங்கள் எப்படி பிடுங்கப்பட்டன என்பதை விவரித்தார்.
‘ வெறுப்பைக் கக்கும் பேச்சை நான் பேசியதாக நாளேடுகளில் சிலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்தியா சிதைவதை நான் விருபுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கு மாறாக எனது பேச்சு அன்பிலிருந்தும் பெருமிதத்திலிருந்தும் வருகிறது. நாங்கள் எல்லோரும் இந்தியர்கள்தான் என அவர்களைப் பலவந்தப்படுத்திச் சொல்லவைக்கவேண்டும் என்பதற்காக அவர்களது விரல் நகங்களைப் பிடுங்கவேண்டாம்; கற்பழிக்கவேண்டாம் , படுகொலை செய்யவேண்டாம் என்ற உணர்விலிருந்து வருகிறது. நீதி விளங்கும் ஒரு சமூகத்தில் வாழவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து வருகிறது. தமது எண்ணங்களைப் பேசுகிற காரணத்தால் எழுத்தாளர்களை மௌனிகளாக்கி வைக்க இந்த தேசம் விரும்புகிறது என்பது பரிதாபகரமானது. நீதி கோருபவர்களை சிறையில் அடைக்க இந்த நாடு முயற்சிக்கிறது, ஆனால் மதவெறிக் கொலைகாரர்கள் ; இனப்படுகொலைகளைச் செய்தவர்கள் ; கொள்ளைக்காரர்கள்; கற்பழிப்பவர்கள் , ஊழல் செய்பவர்கள், ஏழைகளிலும் ஏழையான மக்களைச் சுரண்டுபவர்கள் போன்றவர்களெல்லாம் இங்கே சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அக்டோபர் 26, 2010 அருந்ததி ராய்

பி.கு : இது நிறப்பிரிகை ரவிக்குமார் அவர்களால்
மொழிபெயர்க்கப் பட்ட அறிக்கை.

Thursday, October 28, 2010

கவிதை குறித்து



கண்ணாடிச்
சுவரில்
வழுக்கி
விழும்
மழைத்
துளிகளைப்
போல்
நழுவி
விடுகின்றன
கவிதைக்கான
சாத்யங்கள்.



தன்
கூடை
தானே
சுமந்து
செல்லும்
நத்தையைப்
போல்
வார்த்தைகளைச்
சுமந்து
அலைகிறதொரு
கவிதை.




கனவிற்கு
வர்ணம்
தீட்டப்
போகிற
கவிதையை
எழுதப்
போகும்
கவியைத்
தேடிக்
கொண்டிருக்கிறதொரு
கவிதை.

Wednesday, October 27, 2010

அறிந்ததும், அறியாததும்



நீ
இட்ட
முதல்
முத்தம்
ஞாபகத்தில்
உளது.
கடைசி
இல்லை.
அது
கடைசியென
அறியப்
படாததால்.

Saturday, October 23, 2010

ஊஞ்சல்

நிறைவு
செவியில்
சங்கீதம்
பொருத்திக்
கொண்டு
தனிமை
தேடுகிறது.
நிறைவின்மையோ
கொந்தளிக்கும்
வரிகளில்
சமன்
குலைத்துக்
கொள்கிறது.
நிறைவிற்கும்
நிறைவின்மைக்கும்
இடையே
ஊஞ்சலாடிக்
கொண்டிருக்கிறது
ஜீவிதம்.

Thursday, October 21, 2010

சாத்தியம்

ஒரு
வண்ணத்து
பூச்சியின்
பயணக்
குறிப்பை
மொழிபெயர்த்து
விடலாம்
உறக்கத்தில்
புன்னகைக்கும்
குழந்தையின்
கனவினை
அறிய முடிந்தால்.

Friday, October 15, 2010

கூறியது கூறல்



சுத்தம்
சோறு போடும்.
அசுத்தமும்
ஆகாரம் போடும்.



இளமையில்
கல்.
முதுமையிலும்.



அன்பிற்கும்
உண்டு
அடைக்கும்
தாழ்.

Tuesday, October 12, 2010

அம்புகள்

தல்ஸ்தோய்
குளிரில்
விறைதார்.
பாரதி
யானையின்
காலில்
மிதிபட்டார்.
ஆத்மாநாம்
மாடியிலிருந்து
தாவினார்.
ஆதவன்
சிருங்கேரியில்
மூழ்கினார்.
மரணத்தின்
முன்
வீசப்பட்ட
எதிர் கேள்விகள்
முனை முறிந்த
அம்புகளோ?

Saturday, October 9, 2010

ஒற்றைப் பாதை


கிருஸ்து
கிருஷ்ணன்
புத்தர்
மார்க்ஸ்
காந்தி
ரமணர்
ஜேகே
ஓஷோ.
இவர்களைச்
சென்றடையும்
ஒற்றைப் பாதை
எங்கிருந்து
ஆரம்பிக்கிறது?
சாலையோரம்
கடவுள் சாயலில்
நின்று
கொண்டிருந்தவரிடம்
கேட்டேன்.
வெண்தாடியை
உருவியவாறு
மென்குரலில்
சொன்னார்:
’நூலகத்திலிருந்து’.

Thursday, October 7, 2010

வரங்கள்

பேருந்து
பயணத்தில்
வாய்த்த
குழந்தையின்
புன்னகை.

*************

தளர்ந்து
அமர்கையில்
கன்னம்
தடவும்
மென் இறகு.

************

பருகி
முடித்த
தேநீர்க்
கோப்பையின்
விளிம்பில்
வந்தமரும்
வண்ணத்துப்பூச்சி.

*************

பழைய
புத்தகத்திலிருந்து
தன்னை
விடுவித்துக்
கொண்டு
வெளிப்படும்
காதல் கடிதம்.

**************

Tuesday, October 5, 2010

புத்தம் புது வார்த்தை


வார்த்தை
போதாமையால்
முடிக்கப்படாமல்
இருக்கிறது
அக்கவிதை
விழிகள்
திறக்கப்படாத
ஓர் ஓவியம்
போல்.
உபயோகித்து
மழுங்கிப்
போனவைகளையும்
பொய்ப் புனிதம்
ஏற்றப்பட்ட
வார்த்தைகளையும்
விலக்கினால்
மிஞ்சுபவை
ஒன்றுமில்லை.
நியூட்டனுக்காய்
உதிர்ந்த
கனி போல்
தன்னை
வெளிப்படுத்திக்
கொள்ளாமலாப்
போய்விடும்
ஒரு
புதிய வார்த்தை.

Sunday, October 3, 2010

ஆம் ...


ஆம்
தோழர்களே.
கடைசி
ரயிலையும்
தவறவிட்டவன்
நான்.
அதன்
சிகப்பு வெளிச்சப்
புள்ளிகள்
இன்னமும்
மறையவில்லை.
தண்டவாளத்தின்
மெல்லிய
அதிர்வும்
அடங்கவில்லை.
ஆம்
தோழர்களே.
அதனை
தவறவிட்டதால்
நாளைய
முதல் ரயிலுக்காய்
காத்திருப்பவன்
என யூகித்தால்
அதனையும்
தவறவிடப் போகிறவன்
நான்.