A Great Collection of all Tamil aggregators

Saturday, September 11, 2010

ப்ரிய சகி



அம்மாவை முதன் முதலில் எங்கே சந்தித்தீர்கள் அப்பா என்று நம்
பெண் கேட்டதும் உன் கண்களில் ஒரு மின்னல் அடித்ததே...அது
நம் முதல் சந்திப்பில் நமக்குள் பெய்த மழையின் மிச்சம்தானே சகி?

**************

நம் குழந்தை பிறந்த நொடியில் முதலில் அழுதது நான் தான் என்று
என்னை நீ கேலி செய்யும் பொழுதெல்லாம் உன் விழியோரங்களில்
திரண்டு நிற்கிறதே..அதன் பெயர் என்ன சகி?

**************

உன் அடிவயிற்று பிரசவ தழும்புகளை நம் குழந்தைகளின்
தேசத்திற்கான வரைபடம் என்று நான் சொல்லும்போதெல்லாம் நீ
உதிர்க்கும் வெட்கப் புன்னகைகளைச் சேர்த்து வைத்திருக்கிறேன்.
அவ்வப்போது புரட்டிப் பார்த்துக் கொள்ள சகி.

**************

சகி..இப்போதெல்லாம் உன் மூச்சுக் காற்றில் சுழன்று வீழ்கிறது
என் காமம்.

**************

சகி...நம் காதல் கடிதங்களை உன் புடவைகளுக்கு அடியில் நீ
பத்திரப் படுத்தி வைத்திருக்கிறாய். நானோ என் மனசின் அடியில்.

5 comments:

  1. உங்கள் மனைவி பாக்கியசாலி... மனைவியின் மீதுள்ள காதலின் வெளிபாடு... அருமையாக வெளிப்பட்டிருக்கிறது..

    ReplyDelete
  2. மிக அருமையான நெகிழ்வான வெளிப்பாடு.

    ReplyDelete
  3. நான்கும் தவிர்க்க முடியாத தவிர்க்க கூடாத மென்உணர்வுகளை எளிய வார்த்தையில் பிடித்த உங்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. முதலில் மின்னல்-பின் மழை-அதன் பின் மழைக்குப் பிந்தைய மரத்தின் தலை சிலுப்பல்-மென் காற்றாய்ச் சுழன்று விழும் காமம் என்று ஒரு மழைக்காட்சியை நினைவுபடுத்துவதாய் மிதக்கும் அழகு மென் வரிகளுக்கு ஈடாய் மோதிர விரலுக்கு உங்கள் மனைவியை மற்றொரு மோதிரம் அணிவிக்கச் சொல்லுங்கள் மது.

    ReplyDelete
  5. கவி மனசை இணையாகப் பெற்ற தங்கள் துணைவிக்கு தோழமையுடன் ஒரு கைகுலுக்கல்!
    இதம் நிறைந்திருக்கட்டும் எப்போதும்... வாழ்த்துகள்!

    ReplyDelete