A Great Collection of all Tamil aggregators

Wednesday, July 28, 2010

பிரிய ரெஜி டீச்சர்



ஞாபகமிருக்கிறதா டீச்சர்.
நான் வனப்பேச்சி.
நீலிமலை வனப்பேச்சி.
காட்டில் பெய்யும் மழை போல உங்கள் நினைவுகள்
மிக அடர்த்தியாய் இன்னமும் இருக்கிறது.
நன்றாக ஞாபமிருக்கிறது டீச்சர்.
மிஷனரிகள் கூட கண்டுகொள்ளாத காடு எங்களது.
தினமும் பத்து கிலோமீட்டர் தூரம் ஏறி வருவீர்கள்.
எங்களுக்கும் எல்லாம் கற்றுக் கொடுத்தது நீங்கள் தான்.
முதல் குருதி குறித்து கூட.
அப்போது நீங்கள் எங்களின் தேவதை.
காக்கி பேண்ட்டும்,ஒட்ட வெட்டிய தலை மயிரும்
செல்வதற்கு ஒரு சைக்கிளுமாய் நீங்கள்
நீங்கள் நிரம்ப மாறுபட்டிருந்தீர்கள்.
உங்கள் சிந்தனைகளும் தான்.
கல்வியின் முக்கியத்துவம் உங்களால்தானே
அறிந்தோம். அந்த உந்துதலில்தான்
பொறியியல் படித்தேன்.
கட்டாயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
வனத்தையும்,மலைகளையும்
தெய்வங்களாய் வணங்கும் நாங்கள்
இந்த அரசாங்கத்தால் எவ்வளவு
இழிநிலைக்குத் தள்ளப் பட்டிருக்கோமேன.
பெரு முதலாளிகள் வனங்களையும்
மலைகளையும் கொன்று குவித்துக்
கொண்டிருக்கிறர்கள். அவர்கள் அருகே
அரசு மர்மப் புன்னகையுடன் கைகட்டி
ஏவல் செய்கிறது.
எங்களை நாகரீகப் படுத்துதல் என்கிற
பெயரில் காடுகளிருந்து நகரத்துக்கு
அப்புறப் படுத்த முயற்சிக்கிறார்கள்.
அதைத்தான் நாங்கள் எதிர்க்க
ஆரம்பித்திருக்கிறோம்.
அதனாலேயே எங்களுக்கு
தீவிரவாதிகளென பெயர்சூட்டி
அரசாங்கம் ஊடகங்களின் துணையுடன்
பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.
இதற்கு நம் அறிவுஜீவிகளின் ஆதரவு வேறு.
டீச்சர்...
எந்த நேரமும் நாங்கள் படுகொலை
செய்யப்படலாம். எங்கள் பெண்கள்
வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் படலாம்.
எத்தகைய யுத்தத்திலும்
முதல் பாதிப்பு பெண்களுக்கும்,
குழந்தைகளுக்கும் தானே.
அதுதான் இங்கே நடந்து
கொண்டிருக்கிறது.
டீச்சர்...
ரெண்டு,மூன்று நாட்களகவே
உங்கள் ஞாபகம் வந்து கொண்டே
இருக்கிறது. அதனாலே இக் கடிதம்.
இது உங்கள் கையில் கிடைக்கலாம்.
கிடைக்காமல் போகலாம்.
எனினும் நம்பிக்கையுடன்
முடிக்கிறேன்.
தாங்கள் நலமா என்று விசாரிக்க
கூட முடியாத நெருக்கடியில் நிற்கிறேன்.

உங்கள்

வனப்பேச்சி.

கடிதத்தை மடிக்கையில் பின் பக்கம்
மெலிதான சப்தம் கேட்டது.
திரும்புவதற்குள்
வனப்பேச்சியின் பின் மண்டையில்
பேரரவத்துடன் ஒரு துப்பாக்கி வெடித்தது.

Sunday, July 25, 2010

வீசும்
காற்றினை
அனுசரித்து
பயணிக்கும்
பாய்மரக் கப்பலின்
யுக்தியின்
வழி
நகர்கிறதென்
ஜீவிதம்.

***************

புதர்
மறைவிலிருந்து
வெளிப்படும்
மிருகத்தின்
நெற்றிக்காய்க்
காத்திருக்கிறது
ஒற்றைத் தோட்டா.

***************

வனத்தில்
திசை
மயங்கியவனுக்காக
விட்டுப் போகிறது
யானை
தன்
சாணத்தை.

Thursday, July 22, 2010

மாறுதல்



நீந்தி
கிளிஞ்சல்கள்
பொறுக்கி
வீடு கட்டி
சிதைத்து
திளைத்த
ஞாபகச்
சுவடின்றி
அலை
தொடா
தூரத்தில்
புகைப்படம்
எடுத்தவாறு
நான்.

என்றும்
மாறுவதில்லை
கடல்.

Monday, July 19, 2010

இரண்டு படங்கள்



இந்த வாரம் இரண்டு படங்கள் பார்த்தேன்.
இரண்டும் என்னை வசீகரித்தன.

Inception (2010)
***************
தொழில் நுட்பத்தால் நம்மை பிரமிக்க வைத்த படங்கள் ஏராளம்.
மதி நுட்பத்தால் வியக்க வைத்த படம் இது.
ஒருவர் கனவில் மற்றவர் புகுவது.
நம் கனவை நாமே அமைத்துக் கொள்வது.
ஒருவர் மூளையில் பதிந்திருக்கும் ஒரு ஐடியாவை வெளியே எடுத்து விட்டு
வேறொரு ஐடியாவை செருகுவது.
முடிவேயில்லாப் படிக்கட்டு.
சொல்லிக் கொண்டே போகலாம்.
கிறிஸ்டோபர் நோலன் படத்தின் இயக்குனர்.
ஒவ்வொரு சீனிலும் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது.
படத்தை முறையாக பின் தொடரவில்லை என்றால்
குழம்பிப் போவதற்கு சாத்தியமுண்டு.
நோலன் முன்பு Memento என்ற படம் எடுத்துள்ளார்.
முருகதாஸின் இயக்கத்தில் கஜினி என்றொரு படம் வந்ததே
அது இதன் அப்பட்டமான நகல்.




களவாணி
*********

ரொம்ப நாளைக்குப் பின் சந்தோஷமாய் ஒரு படம்.
சற்குணம் இயக்கியுள்ளார்.
தஞ்சை மண்ணுகே உரிய நக்கல்.. நையாண்டி.
எந்த் சிடுமூஞ்சியும் இதழ் பிரிக்காமல் படம் பார்க்க முடியாது.
மிக எளிமையாய் நகர்கிறது படம்.
இந்த புதியவரிடம் so called ஜாம்பவான்கள்
பாடம் கற்றுக் கொண்டால் நம்மை மாதிரி ரசிகர்கள்
பிழைத்துப் போகலாம்.

Wednesday, July 14, 2010

இரண்டுக்குமிடையே

காற்றில்
அசையும்
சரவிளக்கின்
மெல்லிய
வெளிச்சம்
போல்
அங்கீகாரத்திற்கும்
நிராகரிப்பிற்கும்
இடையே
ஊசலாடுகிறது
ஒரு
பெருங்காதல்.

Monday, July 12, 2010

கவிதானுபவம்



பறவை
போல்
பறத்தல்
சாத்யமாகிறது
சில
கவிதைகளை
எழுதும் போதும்
சிலவற்றை
வாசிக்கும் போதும்.
தரையில்
மோதி
வீழவும்
நேரிடுகிறது
சிலவற்றை
எழுதும் போதும்
வாசிக்கும் போதும்.

Tuesday, July 6, 2010

என்றாவது ஒரு நாள்



மீதமிருக்கிறப்
பொய்களை
விநியோகம்
செய்து
முடிப்பதற்குள்ளே
பறவை
உதிர்த்த
ஒற்றைச் சிறகு
காற்றில்
மிதந்து வந்து
உள்ளங்கையில்
அமர்வது போல்
உண்மை
தன்னை
விடுவித்துக் கொண்டு
வட்டமிடும்.

Saturday, July 3, 2010

சருகுகளின்
இசையூடே
காற்று
நடக்கும்போது
வனம்
தன்
பாடலை
பாடத்தொடங்குகிறது.